100 கிலோ தங்கம் மாயமான வழக்கு : ஓய்வுபெற்ற தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை
100 கிலோ தங்கம் மாயமான வழக்கில் ஓய்வுபெற்ற தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தங்கத்தை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனம் சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு இந்திய தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக கழகத்தின் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக கூறி, சி.பி.ஐ. 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
பின்னர் அந்த தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி, 400.47 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது. அந்த தங்கத்தை அந்த தனியார் நிறுவன அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இந்த லாக்கருக்கான 72 சாவிகளை சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
பின்னர், இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் கைவிட்டு, முடித்து வைத்தனர். ஆனால், இந்த தங்கத்தை இறக்குமதி செய்ய வெளிநாட்டு வர்த்தக கொள்கை விதிகள் மீறப்பட்டுள்ளது என்று கூறி, அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கிற்கு இந்த தங்கத்தை பறிமுதல் செய்ததாக கணக்கு காட்டி, முறையாக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டிலும் அனுமதி பெற்றனர்.
இவ்வாறு சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கொண்ட பல கட்ட விசாரணையின் இறுதியில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் வெளிநாட்டு வர்த்தகத்துறை இயக்குனர் ஜெனரலிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சிறப்பு கோர்ட்டிலும் உத்தரவு பெறப்பட்டது. இதற்கிடையில், இந்த தங்கத்தை இறக்குமதி செய்த நிறுவனம் பல வங்கிகளில் ரூ.1,160 கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த தனியார் தங்க இறக்குமதி நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தி நிர்வகிக்க வங்கிகள் சார்பில் சிறப்பு அதிகாரியாக ராமசுப்பிரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த அதிகாரி இந்த தங்கத்தை கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த விசாரணையில் அனைத்து தரப்பு சமரசத்தின் அடிப்படையில், வங்கி சிறப்பு அதிகாரியிடம் தங்கத்தை ஒப்படைக்க சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் தனியார் அலுவலகத்தை திறந்து 72 சாவிகளை பயன்படுத்தி அந்த லாக்கரை திறந்தபோது, 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் குறைவாக இருந்தது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது,தங்கம் மாயமானது குறித்து வங்கிகளின் சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம், சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்யவேண்டும். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு குறையாத அதிகாரி புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவரது புலன் விசாரணைக்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்குப்பதிவு செய்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் புலன் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இதுகுறித்து சி.பி.ஐ. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில்
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த தங்கம் அந்த நிறுவன அலுவலகத்தில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது. அதற்கான சாவிகளும் ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
கோர்ட்டு உத்தரவின்பேரில், கடந்த பிப்ரவரி மாதம் அந்த லாக்கர் திறக்கப்பட்டது. ஆனால் அதில் 296.66 கிலோ தங்கமே இருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கமானது சி.பி.ஐ.க்கு சொந்தமான பண்டக சாலையில் வைக்கப்படவே இல்லை. அந்த தங்கம் முழுமையாக சம்பந்தப்பட்ட அந்த நிறுவன அலுவலகத்தில் உள்ள லாக்கரில் தான் வைக்கப்பட்டிருந்தது.
லாக்கரில் உள்ள தங்கம் குறைந்தது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உயர் அதிகாரி தலைமையில் உள்மட்ட விசாரணைக்கு சி.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது.
சி.பி.ஐ. சார்பில் இந்த உள்மட்ட விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு கடந்த 11-ந்தேதி தீர்ப்பு அளித்திருக்கிறது. சி.பி.ஐ. சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் உள்மட்ட விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்த விசாரணையில் அதிகாரிகள் மீது தவறு செய்ததற்கான முகாந்திரங்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.
அதேவேளை டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின்கீழ் செயல்படும் சி.பி.ஐ. அமைப்பால் திருட்டு வழக்குப்பதிவு செய்ய முடியாது. உள்ளூர் போலீசால் மட்டுமே திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்படும். எனவே மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள். சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு பதவியை கொண்ட அதிகாரி தலைமையில் இந்த விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக, சிபிஐ வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுடன் விசாரணை நடத்தியது. அந்த அதிகாரி முதலில் சிபிஐயில் பணிபுரிந்து பின்னர், மாநில காவல் துறையின் போலீஸ் இயக்குநர் ஜெனரலாக (ஏடிஜிபி) ஓய்வு பெற்று உள்ளார்.
சிபிஐயில் இணை இயக்குநர் பொறுப்பாளர் உட்பட பல்வேறு பதவிகளில் அந்த அதிகாரி பணியாற்றியுள்ளார். மத்திய நிறுவனமான சிபிஐயில் பணியாற்றிய பின்னர் மாநில காவல்துறையிலிருந்து டிஜிபி-யாக ஓய்வு பெற்ற மற்றொரு தமிழக கேடர் அதிகாரியையும் சிபிஐ விசாரணைக்கு அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் நிறுவன தங்க வழக்கை சிபிஐ கையாண்டபோது இந்த இரண்டு அதிகாரிகளும் வெவ்வேறு நேரங்களில் மேற்பார்வை கேடர் பதவியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.