கட்சியின் பெயர், சின்னம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அமைதி காக்க வேண்டும் - ரஜினி மக்கள் மன்றம் வேண்டுகோள்

கட்சியின் பெயர், சின்னம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அமைதி காக்க வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-12-15 10:16 GMT
சென்னை, 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் புதிதாகக் கட்சி தொடங்கிப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. எப்போது கட்சி தொடக்கம் என்ற அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி வெளியிடவுள்ளார் ரஜினி. தற்போது 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த், கட்சி அறிவிப்புப் பணிகளுக்காக டிசம்பர் 29-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

ரஜினியின் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனா மூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இருவருமே கட்சிப் பணிகளை மும்முரமாகக் கவனித்து வருகிறார்கள். 50 இல் இருந்து 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். 

மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என ஒட்டு மொத்தமாக 2 லட்சம் நிர்வாகிகள் உள்ளதாக தகவல் வெளியாகின. ரஜினியின் உத்தரவின் பேரில் சட்டமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டன.

கட்சிக்கு ரஜினி என்ன பெயர் வைக்கப் போகிறார், கட்சிக் கொடியின் நிறம் என்ன, அதில் இடம்பெறும் சின்னம் என்ன என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வந்தது. இந்தசூழலில், ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் பெயர் 'மக்கள் சேவை கட்சி' எனத் தகவல் வெளியானது. இந்தக் கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் நேற்று (டிசம்பர் 14) தமிழகத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் குறித்த அறிவிப்பின் மூலம் தெரியவந்தது.

முதலில் தேர்தல் ஆணையத்தில் அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம் என்று பதிவு செய்யப்பட்ட இந்த கட்சி,  இரண்டு மற்றும் ஒரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேர்தல் ஆணைய அறிவிப்பின் மூலம் ‘மக்கள் சேவை கட்சி’ என்று மறுபெயரிடப்பட்டு உள்ளது.   

ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தபோது மன்ற கொடியையும் அதன் சின்னமாக பாபா படத்தில் பிரபலமடைந்த பாபா முத்திரையையும் அறிமுகப்படுத்தினார். ரசிகர்கள் மத்தியில் பாபா முத்திரை பிரபலமானது.  

இந்நிலையில் கட்சியின் பெயர், சின்னம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அமைதி காக்க வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு மாநில நிர்வாகி சுதாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மாநில நிர்வாகி சுதாகர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்