கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-15 07:05 GMT
சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை ஐ.ஐ.டி. வளாகம் கடந்த 1 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. இங்குள்ள 13 விடுதிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு படித்து வரும் ஒரு மானவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியானது.

இதனை தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 104 ஆக இருந்த நிலையில் இன்று மேலும், 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் தற்போது படித்துவரும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்-லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து துறைகளும் செயல்பட கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமக்க வேண்டும் என்றும் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்