என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆன்லைனில் வகுப்புகள் தொடரும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
இளநிலை மற்றும் முதுநிலை படிக்கும் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கல்வியாண்டுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் ஆன்லைன் வகுப்புகள் அப்படியே தொடரும்.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழகம் அதன் வளாக கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்று இருக்கும் இந்த சூழ்நிலையில் இளநிலை மற்றும் முதுநிலை படிக்கும் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கல்வியாண்டுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் ஆன்லைன் வகுப்புகள் அப்படியே தொடரும்.
இதில் இளநிலை, முதுநிலை இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 5 பாடவேளைகள் கொண்டதாக நடத்தப்பட வேண்டும். இதுதவிர 3 பாடங்கள் படிப்பு சார்ந்த வெளிப்புற கற்றல்களுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கேற்றபடி ஆடியோ பதிவுகளையும், உபகரணங்களையும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.