சென்னையில் 15 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் ‘கிடுகிடு’வென உயர்ந்து இருக்கிறது. அதிகபட்சமாக திரு.வி.க. நகரில் ஒரே மாதத்தில் 2.66 மீட்டர் வரை உயர்ந்து இருக்கிறது.

Update: 2020-12-10 02:22 GMT
சென்னை,

சென்னைவாசிகள் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் மழையால் ஏற்படும் வெள்ளத்தாலும், மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தாலும் பாதிக்கப்படுவார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வருகிறது. அதேபோல், இந்த ஆண்டும் மழையால் சென்னையில் சில இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டனர்.

இது ஒரு புறம் இருக்க தொடர் மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் முழுக்கொள்ளளவையும் எட்டி இருக்கின்றன. இதன் காரணமாக வருகிற கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்க வாய்ப்பில்லை என்ற இனிப்பான செய்தியை அவ்வப்போது சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு நல்ல செய்தியையும் சென்னை குடிநீர் வாரியம் கூறி இருக்கிறது.

அதாவது, சென்னையில் ஒரே மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, ஆலந்தூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம், பெருங்குடி, அடையார், சோழிங்கநல்லூர் ஆகிய 15 மண்டலங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் ‘கிடுகிடு’வென உயர்ந்து இருப்பதை புள்ளி விவரங்களுடன் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, கடந்த அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 2.66 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் 0.54 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருக்கிறது.

ஏற்கனவே சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று கூறி வரும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், தற்போது சென்னையின் 15 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பதால் வீடுகளில் ஆழ்துளையிட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கின்றனர். இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்