புயல் கரையை கடக்கும்போது மின்சார நிறுத்தம் - அமைச்சர் தங்கமணி தகவல்
புரெவி புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்தைப் பொறுத்து மின்சாரம் நிறுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவர்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, நாமக்கல்- திருச்சி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே இது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், ரூ.15 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
நிவர் புயலால் மின்சார வாரியத்துக்கு இதுவரை ரூ.64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். நிவர் புயலின் போது பாதுகாப்பு நடவடிக்கையாக, பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதைப் போல புரெவி புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்தைப் பொறுத்து மின்சாரம் நிறுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.