டெல்லி விவசாயிகள் போராட்டம்: எதிர்க்கட்சிகளால் அரசியல் லாபத்திற்காக நடத்தப்படுகிறது - ஜி.கே.வாசன் கருத்து

டெல்லி விவசாயிகள் போராட்டம் எதிர்க்கட்சிகளால் அரசியல் லாபத்திற்காக நடத்தப்படுகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-02 21:51 GMT
சென்னை, 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விவசாயிகள் போராட்டம் திட்டமிட்டு அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகளால் நடத்தப்படுகிறது.

புதிய வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்திருப்பதால் குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கும் திட்டம் நிறுத்தப்படும் என்று எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்கிறார்கள். இது உண்மைக்கு புறம்பானது. குறைந்தபட்ச ஆதார விலை உறுதியாக கிடைக்கும் என்று மத்திய அரசு உறுதிப்படுத்தி இருக்கிறது.

புதிய வேளாண் சட்டத்தின்படி விவசாயிகள் நேரடியாக சந்தையில் விளைபொருட்களை விற்கலாம். இதனால், இடைத்தரகர்களால் பாதிக்கப்படமாட்டார்கள். புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் பயன் தருவதோடு விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலுக்கும் பாதுகாப்பு கொடுக்கக்கூடிய வகையில் அமையும்.

எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்கு அப்பாவி விவசாயிகள் பலிகடா ஆகிவிடக்கூடாது; ஏமாந்து போகக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்