தளர்வுடன் ஊரடங்கு நீடிப்பு: நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் - மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவு
நிபந்தனைகள் தளர்வுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நிபந்தனைகள் தளர்வுடன் இம்மாதம் 31-ந்தேதிவரை ஊரடங்கை நீடித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு, சில நிபந்தனைகள் தளர்வுடன் டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிப்பதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
ரெயில், மெட்ரோ ரெயில், விமான பயணங்கள், பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிகவளாகங்கள், மல்டிபிளக்ஸ், பொழுதுபோக்கு பூங்கா, யோகா மையம், உடற்பயிற்சி கூடம், கூட்டங்கள் ஆகியவற்றுக்கான நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.
அவற்றை கண்டிப்புடன் அமல்படுத்துவது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும். முககவசம் அணிவது என்பது தற்போது மிக மிகத்தேவையான அம்சமாக உள்ளது. எனவே, பொதுஇடங்கள், வேலைப்பகுதிகளில் மக்கள் முககவசம் அணிந்திருப்பதை கண்டிப்புடன் மாவட்ட நிர்வாகங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். முககவசம் அணியாதவர்களிடம் உரிய அபராதம் வசூலிக்க வேண்டும்.
பொதுப்போக்குவரத்து, சந்தை நடைபெறும் இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும், அந்த பகுதிகளுக்கான நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுவதையும் மாவட்ட நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை மாவட்ட நிர்வாகங்கள் கவனிக்க வேண்டும். கொரோனா பரவல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.