பாஜக-வை வளர்ப்பதற்காகவே அமித்ஷா போன்ற தலைவர்கள் தமிழகம் வருகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்

பாஜக-வை வளர்ப்பதற்காகவே அமித்ஷா போன்ற தலைவர்கள் தமிழகம் வருகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-17 23:26 GMT
சென்னை, 

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியாக இருப்பதினால் தான் முதலீடுகள் அதிகம் ஈர்க்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது. தற்போது சட்டம்- ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. அமித்ஷா போன்று யார் வேண்டுமானாலும் தமிழகம் வரட்டும், போகட்டும். அவருடைய கட்சியை வளர்ப்பதற்காக அமித்ஷா வருகிறார். அதுதான் அ.தி.மு.க.வின் பார்வை. பா.ஜ.க. மாநில தலைவர் கூறுவதை போன்று அமித்ஷா வருவதால் பயப்படுகிறார்களா? பயப்படவில்லையா? என்று எதிர்க்கட்சியை பார்த்துதான் நீங்கள் கேட்கவேண்டும்.

அவர் அரசு நிகழ்வுகளில் பங்கேற்பதாக இதுவரை எந்த நிகழ்ச்சி நிரல்களும் வரவில்லை. பா.ஜ.க. மாநில தலைவர் கூறுவதுபோல, அவர் அரசு நிகழ்வுகளில் பங்கேற்கலாம். தேர்தல் நெருங்கும் சூழலில், கட்சியை பலப்படுத்த தமிழ்நாட்டுக்கு அகில இந்திய தலைவர்கள் வருவது இயற்கை. இதற்கும், அ.தி. மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லோரும் கூட்டணியில்தான் இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்