தொடரும் கனமழை வெள்ளம் சூழ்ந்த சென்னை புறநகர் ; 14 ஏரிகள் நிரம்பி அடையாற்றில் வெள்ளம்

சென்னை புறநகரில் தொடரும் மழையால் பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையை சுற்றி உள்ள 14 ஏரிகள் நிரம்பி வழிவதால் அடையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-11-17 01:04 GMT
சென்னை

தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்வதும், பின்னர் வெயில் அடிப்பதுமாக சென்னையில் இருந்து வந்தது. இதேநிலை தான் மாநிலம் முழுவதும் நிலவியது. ஏற்கனவே கொரோனா பரவலால் ஊரடங்கில் தவித்த மக்கள், மழையால் தீபாவளி கொண்டாட்டம் தடைபடுமோ? என்று பயந்தனர். ஆனால் தீபாவளி பண்டிகை தினத்தன்றும், அதற்கு முந்தைய தினத்திலும் சென்னையில் சில இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை. இதனால் பட்டாசு வெடித்து தீப ஒளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் மழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் நேற்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்தது. எழும்பூர், கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்தே மழை வெளுத்து வாங்கியது. இதனால் தீபாவளி விடுமுறை முடிந்து காலையில் பணிக்கு சென்றவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

சென்னையை சுற்றி உள்ள தாம்பரம், முடிச்சூர், காட்டங்கொளத்தூர், குன்றத்தூர், மாங்காடு, ஆவடி, அம்பத்தூர் என பல ஊர்களில் இரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பகல் பொழுதிலேயே வானம் இருட்டியது. பகல் இரவு போல மாறியது.

தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. 

சென்னையை அடுத்து காட்டாங்குளத்தூர், செந்தமிழ் நகரில் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. காவனூர் ஏரி அருகே இருக்கும் தாழ்வான அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதியான இரையூர், செம்பாக்கம்,நத்தப்பேட்டை, வையூர்,புக்காத்துறை, கொளப்பாக்கம், தாத்தனூர், குண்டுபெரம்பேடு,அரனேரி, நன்மங்கலம், புலிக்கொரடு, எம்.என்.குப்பம், பட்டறைகழனி, வையூர் புல்லிட்டின் தாங்கல் ஆகிய 14 ஏரிகளும் தொடர் மழையால் நிரம்பி உள்ளன.

அந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் கலப்பதால் அடையாற்றிலும் நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை நகரின் ஊடாக ஓடும் அடையாறில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஆற்றங்கரையோரத்தில் இருப்போர் பாதுகாப்பாக இருக்குமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.ல் அடையாறு கரையோரம் உள்ள வரதராஜபுரம், லக்ஷ்மி நகர், முடிச்சூர், பி டி சி கோட்ரஸ், மணிமங்கலம் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாழ்வான இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே முடிச்சூர் அருகே அடையாற்றில் ஆகாய தாமரை படர்ந்து கிடப்பதால் நீரோட்டம் தடைபட்டு, அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் செல்லும் நிலை உருவானது. இதையடுத்து தாம்பரம் தீயணைப்பு துறையினர் ஆகாயதாமரை செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 6 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் மட்டும் இரண்டாயிரத்து 367 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 498 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியில் மிகக் குறைந்த அளவாக 142 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. பூண்டி ஏரியில் அதன் முழுக்கொள்ளளவில் பாதியளவே தண்ணீர் உள்ளது. கிருஷ்ணா நீர், மழை நீர் என ஏரிக்கு ஆயிரத்து 150 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

மேலும் செய்திகள்