நெல்லை- தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2020-11-08 05:46 GMT
நெல்லை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, ஆங்காங்கே பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் நெல்லையில் பகலில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தில் பிற பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்தது.

இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 102.65 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 804 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக 1,405 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 97.24 அடியாக உள்ளது.

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.70 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 66 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக பெருங்கால்வாயில் 35 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கொடுமுடியாறு அணைக்கும் நீர்வரத்து 60 கன அடியாக அதிகரித்து உள்ளது. 52 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் 31.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 40 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பிற அணைகளான வடக்கு பச்சையாறு மற்றும் நம்பியாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 68.10 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 70 கன அடியாக உள்ளது. அதே அளவு தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 65 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 87 கன அடியாக அதிகரித்து உள்ளது. 

அணையில் இருந்து பாசனத்துக்கு 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 25 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கனஅடியாகவும் உள்ளது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை தாண்டி 102 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 54 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் உள்ளது.

36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அணைக்கு வருகிற 13 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேறுகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம்- 10, சேர்வலாறு- 53, மணிமுத்தாறு- 8, நம்பியாறு- 5, கொடுமுடியாறு- 5, சேரன்மாதேவி- 6, பாளையங்கோட்டை- 2, ராதாபுரம்- 3, நெல்லை- 5. கடனாநதி- 3, ராமநதி- 5, குண்டாறு- 2, அடவிநயினார்- 4, ஆய்குடி- 6, சங்கரன்கோவில்- 7, செங்கோட்டை- 3, சிவகிரி- 10, தென்காசி- 3.

மேலும் செய்திகள்