பா.ஜ.கவின் வேல்யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளோம் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-11-05 05:58 GMT
சென்னை, 

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தமிழக டிஜிபி, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்