கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யக்கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
இந்தியாவில் தற்போது ஆன்லைன் ரம்மி, சூதாட்டம் ஆகிய விளையாட்டுகள் அதிக அளவில் இணையதளத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் விளம்பரம் செய்வதன் மூலம் அதிக அளவு இளைஞர்கள் தங்கள் பணங்களை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இதனால் பணத்தை இழக்கும் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டம், ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனிடையே, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யக்கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ், சுதீப், நடிகை தமன்னா உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் விளம்பரம் செய்யும் பிரபலங்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.