திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து விரைவில் முடிவு - அமைச்சர் கடம்பூர் ராஜூ
திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி,
திரையரங்குகளை மீண்டும் திறப்பு குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவில்பட்டியில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதில் இருந்து, அவர் எல்லா பிரச்சினையிலும் அரசியல் செய்கிறார் என்பதை ஒத்து கொண்டுள்ளார். எதிர்க்கட்சி என்றால் நாணயத்தின் இருபக்கம் போன்று செயல்பட வெண்டும் என்று பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார். ஆனால் அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறும் மு.க.ஸ்டாலின் இதனை கடைபிடிக்கவில்லை. இதுபோன்ற கருத்துகளால் வருகிற தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காத நிலை ஏற்படும். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை.
திரையரங்குகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று அரசும் ஆர்வமாக உள்ளது. இதில் மாறுபட்ட கருத்து இல்லை. எனினும் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.
சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையங்குகளில் ஏ.சி. இல்லாமல் பயன்படுத்த முடியாது. மக்களும் அதனை விரும்ப மாட்டார்கள். திரையரங்குகளை மீண்டும் திறக்கும்போது, ஒருவர்கூட பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, திரையரங்குகள் திறப்பு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும். தீபாவளி பண்டிகை காலத்தில் முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்று ரசிகர்களும், பொதுமக்களும் ஆர்வமாக இருப்பார்கள். அதற்கு தடையாக அரசு இருக்காது” என்று அவர் தெரிவித்தார்.