தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 28-ந்தேதி தொடங்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 28-ந்தேதி தொடங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2020-10-23 21:45 GMT
சென்னை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வடதமிழகத்தின் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்து இருக்கிறது.

அடுத்து வரும் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

தமிழகம், ஆந்திர கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கக்கூடிய நிலையில் வடகிழக்கு பருவமழையானது தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, ராயல்சீமா, தெற்கு கர்நாடகா பகுதிகளில் வருகிற 28-ந்தேதியையொட்டி(புதன்கிழமை) தொடங்கக்கூடும்.

தற்போது மேற்கு திசை காற்றும், தாழ்வு மண்டலமும் இருக்கிறது. அது கடந்து கொண்டு வருகிறது. வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் அது நிறைவுபெற்றதும், 25, 26-ந்தேதிகளில் அதன் நிலைமாறி 27 மற்றும் 28-ந்தேதிகளில் காற்று வீசத்தொடங்கி மழையும் தொடங்கும்.

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில், பருவமழை முன்னறிவிப்பாக தமிழகத்தில் வடமாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், தென் மாவட்டங்களில் இயல்பை விட சற்று குறைவாகவும் மழை பதிவாகும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘பள்ளிப்பட்டு 17 செ.மீ., ராமகிருஷ்ண ராஜூபேட்டை 13 செ.மீ., தாமரைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் தலா 11 செ.மீ., திருத்தணி 9 செ.மீ., மதுராந்தகம், சென்னை நுங்கம்பாக்கம், உத்திரமேரூர், கும்மிடிப்பூண்டி, வேம்பாக்கம் தலா 7 செ.மீ., திருவாலங்காடு, சோழிங்கநல்லூர், செய்யூர், அரக்கோணம், செங்குன்றம் தலா 6 செ.மீ., பொன்னேரி, ஆலந்தூர், சென்னை விமானநிலையம், காஞ்சீபுரம், கேளம்பாக்கம், காவேரிப்பாக்கம், பெரம்பூர் தலா 5 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்