7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்க காலதாமதத்தை ஏற்படுத்தினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - கவர்னருக்கு, தமிழக காங்கிரஸ் எச்சரிக்கை
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்க காலதாமதத்தை ஏற்படுத்தினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கவர்னருக்கு, தமிழக காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க தமிழக கவர்னர் காலம் தாழ்த்தி வருவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் இணைந்து கடந்த மாதம் 15-ந்தேதியன்று ஏகமனதாக நிறைவேற்றி தமிழக கவர்னருக்கு அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முன்வரவில்லை.
இதுகுறித்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு மேலும் 3 முதல் 4 வாரங்கள் அவகாசம் தேவைப்படும் என கவர்னர் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும். அப்படி வழங்குவதில் காலதாமதத்தை ஏற்படுத்துவாரேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த விவகாரத்தில் கவர்னரை தட்டிக் கேட்க துணிவில்லாமல் செயல்படும் தமிழக அரசையும் வன்மையாக கண்டிக் கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.