“25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால்தான் அங்கீகாரம் என நிபந்தனை விதிக்கலாம்” - தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு யோசனை
பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படும் ‘லெட்டர் பேடு’ கட்சிகளை கட்டுப்படுத்துவதற்கு, “25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் தான் அங்கீகாரம் என நிபந்தனை விதிக்கலாம்” என தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது.
மதுரை,
தஞ்சாவூரை சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ்நேசன். இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருச்சி அசூரில் ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1,500 சிலிண்டர்களில் பாதுகாப்பற்ற முறையில் ஆக்சிஜன் நிரப்பி வருகின்றனர். இதற்காக இந்த நிறுவனம் உள்ளூர் பஞ்சாயத்தில் மட்டுமே அனுமதி பெற்று உள்ளது. கொதிகலன் ஆய்வாளர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துறையின் அனுமதி, தீயணைப்புத்துறை போன்ற துறைகளின் அனுமதியை பெறவில்லை.
ஊரின் மையப்பகுதியில் இந்த கியாஸ் நிறுவனம் இருப்பதால், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. கடந்த ஜனவரி மாதம் குஜராத்தில் இதுபோன்ற சிலிண்டர் நிறுவனம் விபத்துக்குள்ளாகி மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. எனவே எங்கள் கிராமத்தில் ஆக்சிஜன் நிறுவனம் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது “தற்போது கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்துவது மிகவும் அவசியம். எனவே இந்த வழக்கு பணம் பறிக்கும் நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர், மனுதாரர் சார்ந்த அரசியல் கட்சி எதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் ஏராளமான அங்கீகரிக்கப்படாத லெட்டர் பேடு அரசியல் கட்சிகளை தொடங்கி, பணம் பறிக்கும் நோக்கத்துடன் பலர் செயல்படுகின்றனர். இவர்களால் பொதுமக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதனை கட்டுப்படுத்ததேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய அரசியல் கட்சி தொடங்க தேர்தல் கமிஷன் எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கிறது? குறைந்தபட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி அங்கீகாரம் என்று நிபந்தனை விதிக்கலாம். அப்போதுதான் இது போன்றவர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்.
எனவே இந்த விவகாரம் குறித்து பதில் அளிப்பதற்காக தேர்தல் கமிஷன், உள்துறை அமைச்சகம் மற்றும் சட்டத்துறை ஆகியவற்றை இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது. இந்த துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மேற்கண்ட கேள்விகள் தொடர்பாக பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.