குறைந்தபட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

குறைந்தபட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2020-10-13 09:52 GMT
மதுரை,

தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ்நேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "திருச்சி, அசூரில் ஆக்சிஜன் சிலிண்டர் கம்பெனி இயங்குகிறது. கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள இடத்தில் வைத்து இந்த கம்பெனியில் தினமும் 200 கிலோ கேஸ் நிரப்பப்பட்டு வருகிறது . சுமார் 1,500 சிலிண்டர்களை வைத்து பாதுகாப்பற்ற முறையில் ஆக்சிஜன் கேஸ் நிரப்பி வருகின்றனர்.

இதற்காக இந்த நிறுவனம் உள்ளூர் பஞ்சாயத்தில் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது. மேலும் கொதிகலன் ஆய்வாளர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் துறையின் அனுமதி, மற்றும் தீயணைப்புத் துறை போன்ற துறைகளின் அனுமதி உட்பட எவ்வித அனுமதியும் பெறவில்லை. ஊரின் மையப்பகுதியில் இயங்குவதால் ஊருக்குள் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் ஊரில் உள்ள பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

கடந்த ஜனவரி 5 2020 அன்று குஜராத்தில் இதுபோன்ற சிலிண்டர் நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. எனவே இந்த நிறுவனம் செயல்படுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த பொது நல வழக்கு பணம் பறிக்கும் நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது எனக் கூறி, தள்ளுபடி செய்தனர். மேலும் தற்போது கொரோனா காலத்தில் ஆக்சிஜன் மிகவும் அவசியமான ஒன்றாகும். மனுதாரர் சார்ந்த அரசியல் கட்சி எதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது போன்று தமிழகத்தில் அதிக அளவில் அங்கீகரிக்கப்படாத லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டு,பலரிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன. இது போன்ற லெட்டர் பேட் கட்சிகளால் பொதுமக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இதனைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய அரசியல் கட்சி தொடங்க தேர்தல் ஆணையம் எதன் அடிப்படையில் அனுமதி வழங்குகிறது? என்று கேள்வி எழுப்பினர்.

குறைந்த பட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி என அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தொடர்ந்து தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட துறையை எதிர் மனுதரராக சேர்த்து, வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு,வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்