முதலமைச்சரின் தாயார் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

முதலமைச்சர் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-10-13 06:04 GMT
சேலம்,

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள்(வயது 93). கடந்த வெள்ளிக்கிழமையன்று முதுகு தண்டுவடம் பாதிப்பு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அதிகாலை 1.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதனையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. தாயாரின் மறைவு செய்தியறிந்து முதலமைச்சர் பழனிசாமி நேற்றிரவே புறப்பட்டு கார் மூலம் சிலுவம்பாளையம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர் தனது தாயாரின் உடலுக்கு அவர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

தவசாயி அம்மாள் உடலுக்கு கிராம மக்கள், அரசியல் கட்சியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து காலை 9.30 மணியளவில் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் தவசாயி அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் முதல்வர் பழனிசாமியின் குடும்பத்தினர், உறவினர்கள், சிலுவம்பாளையம் கிராம மக்கள், அதிமுகவினர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு, முதல்வரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அன்னையை இழந்து வாடும் முதலமைச்சருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முதல்வரின் அன்புத்தாயார் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகவும், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக தலைவர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்கள்.

மேலும் செய்திகள்