மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை: அரசு மானியம் பெற காலக்கெடு நீட்டிப்பு அறநிலையத்துறை உத்தரவு

மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை சென்று வந்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது.

Update: 2020-10-12 22:00 GMT
சென்னை, 

தமிழகத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு, சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு முழுமையாக புனித யாத்திரை சென்று வந்தவர்களுக்கு, அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து கடந்த மார்ச் 31-ந்தேதி வரை உள்ள காலங்களில் மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை சென்று வந்தவர்கள், புனித யாத்திரைக்கான அரசு மானியம் பெற கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் தமிழகத்தில் பொது ஊரடங்கும் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக் கப்பட்டு இருப் பதால், விண்ணப்பதாரர்கள் போதிய சான்றிதழ்களுடன் விண்ணப் பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மேலும் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் கடந்த ஏப்ரல் 30-ந்தேதிக்கு பதிலாக வருகிற 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கி தேதி நீட்டிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் கடந்த மார்ச் 31-ந்தேதி வரை மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை சென்று வந்தவர்கள் மானியம் பெற விரும்புவோர், அறநிலையத்துறையின் இணைய தளத்தில்( www.tnhrce.gov.in ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள, விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, கமிஷனர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034’ என்ற முகவரிக்கு வருகிற 31-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தகவலை இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் டாக்டர் சு.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்