மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த சில நாட்களாக வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த சில நாட்களாக வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று மதியம் முதல் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியில் இருந்து 14 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேலும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரத்து 102 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 14 ஆயிரத்து 900 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்தை விட தண்ணீர் திறப்பு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 99.11 அடியாக இருந்தது. எனவே அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டிப்பிடிக்க வாய்ப்பு உள்ளது.