ஜி.எஸ்.டி. இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துங்கள் - தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை

இன்று நடக்கும் ஜி.எஸ்.டி. கூட்டத்தில், மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-10-04 23:14 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜி.எஸ்.டி. இழப்பீட்டை ஈடுசெய்ய உருவாக்கப்பட்ட நிதியில் போதிய பணம் இல்லை என்பதால் வருவாய் இழப்பை ஈடுகட்ட மாநிலங்கள், சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து, 5-ந்தேதி (இன்று) நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 42-வது கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

101-வது அரசியல் சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு ஈடுசெய்தல்) சட்டம் 2017 ஆகியவற்றில் ஜி.எஸ்.டி. சட்டத்தைச் செயல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பு 5 ஆண்டுகளுக்கு ஈடுசெய்யப்படும் என்று மாநிலங்களுக்கு அளித்த இறையாண்மை மிக்க உத்தரவாதத்தை மத்திய பா.ஜ.க. அரசு காற்றில் பறக்கவிட்டுள்ள செயல் மிகுந்த வேதனைக்குரியது.

வசூல் செய்யப்பட்ட ஈடுசெய்தல் நிதியை சம்பந்தப்பட்ட ஜி.எஸ்.டி. மாநிலங்களுக்கு ஈடுசெய்யும் நிதியில் வரவு வைக்காமல் இந்தியத் தொகுப்பு நிதியில் வைத்துக் கொண்டு ரூ.47,272 கோடியை வேறு செலவுகளுக்கு மத்திய அரசு பயன்படுத்தி விட்டது என்று சி.ஏ.ஜி. அமைப்பே பகிரங்கமாகக் குற்றம் சாட்டி விட்டது.

கடந்த 27.8.2020 அன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 41-வது கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியானபோது தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் அதை வலுவாக எதிர்த்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போராடியிருக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருக் கும் வாக்கெடுப்பு முறையை பயன்படுத்தி ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீட்டை ஈடுசெய்ய மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக மாநிலங்களைத் திரட்டும் ஓர் அருமையான வாய்ப்பை அ.தி.மு.க. அரசு சென்ற கூட்டத்திலேயே கோட்டை விட்டுவிட்டது.

கடிதம் எழுதி விட்டால் ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீட்டை மத்திய அரசு ஈடு செய்து விடாது என்பதை எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும். தி.மு.க. உறுப்பினர் வில்சன் மாநிலங்களவையில் இதுகுறித்துக் கேள்வி எழுப்பிய போது, தமிழ்நாட்டிற்கு ரூ.11,269 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை நிலுவையில் உள்ளது என்று 20.9.2020 அன்று மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் சிங் தாகூர் பதிலளித்திருக்கிறார்.

கொரோனா பேரிடரில் தமிழகத்தின் நிதி நிலைமை தள்ளாடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அரசியல் சட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்டுள்ள தொகையை உரிமையுடன் கேட்டுப் பெறுவதில் இதுவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வி கண்டு நிற்பது, தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது.

ஆகவே இனியும் அமைதி காக்காமல் 5-ந்தேதி (இன்று) நடக்கும் 42-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும், மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆக்கபூர்வமாக வலியுறுத்தி மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்