உடுமலையில் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் அமைச்சரின் உதவியாளர் காரில் கடத்தல் மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

உடுமலை எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை துப்பாக்கி முனையில் காரில் கடத்திய கும்பல், அவரிடம் இருந்து நகையை பறித்து விட்டு, தளி பகுதியில் இறக்கி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-23 22:15 GMT
உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அன்சாரி வீதியில் உள்ள உடுமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பயன்படுத்தி வருகிறார். உடுமலையை அடுத்த தாந்தோணியை சேர்ந்தவர் கர்ணன் (வயது 33) என்பவர் அந்த அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே அலுவலகத்தில் பெதப்பம்பட்டியை சேர்ந்த கற்பகம் என்ற பெண்ணும் வேலை செய்து வருகிறார். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் கற்பகம் அலுவலகத்திற்கு வந்து பணி செய்து கொண்டிருந்தார். அதே போல் கர்ணனும், தனது வீட்டில் இருந்து காரில் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் காரை அலுவலகம் முன்பு நிறுத்தி விட்டு, அலுவலகத்திற்குள் சென்றார். எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கர்ணனுக்கு தனி அறையும், கற்பகத்திற்கு மற்றொரு அறையும் உள்ளன.

கர்ணன் அலுவலகத்திற்கு நுழைந்தவுடன், எம்.எல்.ஏ. அலுவலகத்தின் அருகே ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் ஒன்று பின்நோக்கி வந்தது. பின்னர் அந்த காரில் டிரைவருடன் சேர்த்து 5 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 30 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் 4 பேர் மட்டும் முக கவசம் மற்றும் முகமூடி அணிந்தபடி துப்பாக்கி மற்றும் கத்தியுடன் காரை விட்டு கீழே இறங்கினார்கள். பின்னர் அவர்கள் திடீரென்று எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்து, கர்ணனை துப்பாக்கி முனையில் தரதர வென்று வெளியே இழுத்து வந்தனர். இதை பார்த்ததும் கற்பகம் கூச்சலிட்டார். அவருடைய சத்தம் வெளியில் கேட்டு விடக்கூடாது என்பதற்காக கற்பகம் இருந்த அறையை வெளிப்பக்கமாக அந்த கும்பல் பூட்டி விட்டு, கர்ணனை காரில் ஏற்றி மின்னல் வேகத்தில் கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் காலை 10.40 மணிக்கு நடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கற்பகம் தனது செல்போன் மூலம் உடுமலை போலீசாருக்கும், கட்சி பிரமுகர்களுக்கும் தெரிவித்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் மற்றும் போலீசார் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு பணியில் இருந்த கற்பகத்திடம் நடத்த சம்பவம் குறித்து விசாரித்தனர். மேலும் எம்.எல்.ஏ. அலுவலத்திற்குள் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இது குறித்து அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறமுடைய கார் சென்றால் அதை தடுத்து நிறுத்தும்படி வாக்கி-டாக்கி மூலம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து சோதனை சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் அமைச்சரின் உதவியாளரை மர்ம கும்பல் காரில் கடத்தி சென்ற தகவல் அந்த பகுதியில் காட்டத்தீபோல் பரவியது. இதனால் அங்கு கட்சி நிர்வாகிகள் குவியத்தொடங்கினார்கள்.

இந்த நிலையில் கர்ணனை கடத்தி சென்ற கும்பல் அவரை தளி பகுதியில் இறக்கி விட்டு விட்டதாகவும், அவர் தளியில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர் குமரவேல் என்பவரது வீட்டில் இருப்பதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் தளிக்கு விரைந்து சென்றனர். அங்கு குமரவேல் வீட்டில் இருந்த கர்ணனிடம் விசாரணை செய்தனர்.

அப்போது தன்னை காரில் கடத்திய கும்பல் காரில் வைத்து துணியால் கண்ணை கட்டி விட்டதாகவும், இதனால் எங்கு செல்கிறோம் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் அணிந்து இருந்த 3 பவுன்நகை, ஒரு பவுன்மோதிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை அந்த கும்பல் பறித்து விட்டதாகவும், கண்ணில் கட்டிய துணியை அவிழ்த்து விட்டு, காரில் இருந்து இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டது என்றும் கூறினார். மேலும், கடத்தல் கும்பல் தன்னை வாளவாடி பிரிவு பகுதியில் இறக்கிவிட்டனர் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க தன்னிடம் செல்போன் இல்லாததால், அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தளியில் உள்ள குமரவேல் வீட்டிற்கு வந்து, அதன்பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் விசாரணையில் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கண்ணை கட்டியதால் அவர்கள் யார்? என்று தெரியாது என்றும், கடத்தி சென்றவர்களின் குரலை இதுவரை கேட்டதில்லை என்றும் கர்ணன் போலீசில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, காரில் வந்த மர்ம ஆசாமிகள் யார்? என்றும் எதற்காக கர்ணனை கடத்தி சென்றார்கள்? வேறு ஏதும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டப்பகலில் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்து அமைச்சரின் உதவியாளரை துப்பாக்கி முனையில் தரதர வென்று இழுத்து சென்று காரில் மர்ம கும்பல் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்