சென்னை விமான நிலைய பெயர் அறிவிப்பு பிரச்சினை: மத்திய மந்திரிக்கு, ஆர்.எஸ்.பாரதி கடிதம்

சென்னை விமான நிலைய பெயர் அறிவிப்பு பிரச்சினை தொடர்பாக மத்திய மந்திரிக்கு, ஆர்.எஸ்.பாரதி கடிதம் அனுப்பி உள்ளார்.

Update: 2020-09-20 01:58 GMT
சென்னை, 

மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணை மந்திரி ஹர்தீப் சிங் பூரிக்கு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நான், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை புரியும் போதும் அல்லது புறப்படும் போதும் தவறான முறையில் செய்யப்படும் அறிவிப்பு குறித்த விவரத்தினை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, சென்னை உள்ளூர் விமான முனையத்தினை காமராஜர் விமான நிலையம் என்றும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தினை அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றும் அறிவித்தது பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

அவ்வாறு பெயர் சூட்டப்பட்ட பின்னரும், பெரும்பாலும் சென்னை விமான நிலையம் என்றும், சென்னை சர்வதேச விமான நிலையம் என்றும் தற்போதும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், சென்னை விமான நிலைய பெயர்கள் குறித்த அறிவிப்புகளை முறையாக செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நெறிமுறைக் கட்டளைகள் வழங்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்