தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது - வைகோ கண்டனம்

தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-10 06:14 GMT
சென்னை,

தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இந்தி, சமஸ்கிருத மொழிகளை தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை வரையில் திணிப்பதற்கு தேசியக் கல்விக் கொள்கை-2020 வழி செய்கிறது என்பதால், கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்படும் என்று ஒப்புக்காக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அரசு, பாஜக அரசின் இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு துணைபோய்க்கொண்டு இருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்க மத்திய அரசு உதவித்தொகை வழங்குவதாகவும், தகுதியுள்ள மாணவர்கள் பட்டியல் தயாரித்து, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

ஊக்கத்தொகை என்ற பெயரில் நிதி உதவி செய்து, தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை புகுத்த நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாடு அரசு இசைவு அளித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்