“ஊர் திரும்ப முடியாமல் தவித்த ஊரடங்கு வருத்தம் தீர்ந்தது” - பயணிகள் உற்சாகம்
மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்தால், “ஊர் திரும்ப முடியாமல் தவித்த ஊரடங்கு வருத்தம் தீர்ந்ததாக” பயணிகள் உற்சாகமாக கூறினார்கள்.
சென்னை,
தமிழகம் முழுவதும் நேற்று முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது போக்குவரத்து முடக்கப்பட்டதன் காரணமாக கடந்த 5 மாதமாக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
திருவிழாக்கள், குலதெய்வ வழிபாடுகள், சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் கலந்து கொள்ள முடியாமலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து மகிழ முடியாமலும் வருத்தத்தில் இருந்து வந்தனர். மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்ட பஸ் சேவை பயணிகளை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்துள்ளது. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று பயணிகள் மகிழ்ச்சி ததும்ப தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதை பார்க்க முடிந்தது.
இதுகுறித்து ஆரணியை சேர்ந்த ஜெயந்தி கூறியதாவது:-
எனது சொந்த ஊர் ஆரணி. கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள எனது உறவினர் வீட்டுக்கு வந்தேன். பின்னர் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தேன். 5 மாத காலமாக சென்னையிலேயே தங்கி இருந்தேன். தற்போது வெளியூர் இடையே பஸ் சேவை இயக்கப்பட்டதால் மகிழ்ச்சியில் இருக்கிறேன். சொந்த ஊரில் உள்ள எனது உறவினர்களை சந்திக்க உற்சாகமாக புறப்பட்டிருக்கிறேன். வெளியூர் இடையே அரசு பஸ்களை இயக்கிய தமிழக அரசுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்லூரி மாணவிகளான கலையரசி-ஹரிதா கூறியதாவது:-
நாங்கள் விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வந்தோம். சென்னையில் உள்ள கல்லூரியில் எங்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது. கல்லூரியில் இடம் கிடைத்த மகிழ்ச்சி இருந்தால்கூட ஊருக்கு செல்ல சிரமப்பட்டு வந்தோம். இந்தநிலையில் வெளியூர் இடையே பஸ்கள் இயக்குவதாக அரசு அறிவித்தது எங்களுக்கு உதவியாக அமைந்தது. தற்போது நாங்கள் சொந்த ஊருக்கு மகிழ்ச்சியுடன் செல்கிறோம். நீண்ட நாட்களுக்கு பிறகு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இயல்புநிலை திரும்பியதாக உணர்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தனியார் நிறுவன ஊழியரான ரகுமான் கூறும்போது, ‘காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். வியாபார விஷயமாக நான் அடிக்கடி வெளியூர் செல்வேன். ஊரடங்கு காரணமாக பஸ் சேவை முடக்கப்பட்டதால் தவித்து வந்தேன். தற்போது இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. வழக்கம்போல பஸ் சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் என்னைப்போல தொழில் சார்ந்த பிற ஊர்களுக்கு செல்வோர் பயனடைவார்கள். சுபநிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் சங்கடப்பட்டு கொண்டு இருந்தவர்கள் இனிமேல் தாராளமாக வெளியூர்களுக்கு பயணிக்கலாம்’ என்றார்.