தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வடமாவட்டங்களை தவிர பிறஇடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இன்றும் (திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், பரமக்குடி 11 செ.மீ., கீழ் கோதையாறு 9 செ.மீ., கடம்பூர், கயத்தாறு தலா 6 செ.மீ., தேவாலா, சத்தியமங்கலம் தலா 5 செ.மீ., மதுக்கூர், கமுதி, வால்பாறை, திருவாரூர், கழுகுமலை, ஆழியாறு தலா 4 செ.மீ. உள்பட பல இடங்களில் மழைபெய்துள்ளது.