மருத்துவ படிப்பு அங்கீகாரத்திற்காக திருச்சியில் தேர்வு எழுதிய நடிகை சாய் பல்லவி - மாணவர்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி

மருத்துவ படிப்பு அங்கீகாரத்திற்காக திருச்சியில் தேர்வு எழுதிய நடிகை சாய்பல்லவியுடன் மாணவர்கள் செல்வி எடுத்து மகிழ்ந்தனர்.

Update: 2020-09-02 21:30 GMT
திருச்சி,

வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இங்கு மருத்துவராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வில் (FMG Foreign Medical Graduate Examination) தேர்ச்சி பெறுவது அவசியம். அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்தால் இந்த தேர்வை இந்தியாவில் எழுதத் தேவையில்லை.

அதேநேரம் ரஷியா, சீனா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதையொட்டி தேசிய கல்வி தேர்வு வாரியம், ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு 2 முறை இந்த தேர்வை நடத்தி வருகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜூன் மாதம் நடைபெற இருந்த இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, கடந்த 31-ந்தேதி நடைபெற்றது. பிரபல தமிழ் நடிகையான சாய்பல்லவி, சினிமாவுக்கு வரும் முன்பு வெளிநாட்டில் பல் டாக்டருக்கு படித்தவர். படிப்பு முடிந்ததும் முதலாக மலையாள படம் ஒன்றில் நடித்து பிரபலமானார்.

அடுத்து தமிழில் நடிகர் தனுஷ் நடித்த மாரி-2 படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் ஜார்ஜியா நாட்டில் மருத்துவ கல்வி படித்துள்ளார். தற்போது இந்திய மருத்துவ அங்கீகாரத்துக்கான தேர்வு எழுத திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம் பொறியியல் கல்லூரிக்கு நடிகை சாய் பல்லவி வந்திருந்தார். அந்த தேர்வு மையத்தில் அவர் தேர்வு எழுதினார்.

தேர்வு முடிந்து வெளியே வந்த சாய்பல்லவியை சக தேர்வர்கள், மாணவர்கள் அடையாளம் கண்டு அவரை மொய்த்து எடுத்து அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அவருடன் செல்பி எடுத்த படங்கள் தற்போது வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்