பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டவேண்டாம் - டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டவேண்டாம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளிகளை எப்போது திறக்கலாம்? என்பது குறித்து தெரிவிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்புகள் இன்னும் குறையவில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இத்தகைய சூழலில் பள்ளிகளை திறப்பது குறித்து சிந்திப்பதே பொருத்தமற்ற செயலாகத் தான் இருக்கும். கொரோனா வைரஸ் முழுமையாக ஒழிக்கப்படாமல் பள்ளிகளை திறந்து, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் மிகவும் நெருக்கமாக அமரவைக்கப்பட்டால் அதுவே தீவிர நோய்ப்பரவலுக்கு வழிவகுத்து விடக்கூடும்.
எனவே, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் அரசு அவசரம் காட்டக்கூடாது. மாறாக, பள்ளிகளை எப்போது திறக்கலாம்? வகுப்புகளை எந்த முறையில் நடத்தலாம்? என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பது குறித்து உள்ளூர் சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.