தமிழகத்தில் எந்த மாவட்டமும் இனி பிரிக்கப்படாது - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்றும், ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
ஈரோடு,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா, புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு உள்ளது. அதற்கான நடவடிக்கை என்ன?
பதில்: சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். யார் சிலையை சேதப்படுத்தினார்களோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. வழக்கு பதிவு செய்யப்படும்.
கேள்வி: மின்சார கட்டணம் நிர்ணயித்ததில் முறைகேடு இருப்பதாக கூறி தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளதே?.
பதில்: மின்சார கட்டணம் நிர்ணயித்ததில் என்ன முறைகேடு இருக்கிறது என்றே தெரியவில்லை. கோர்ட்டுக்கு சென்றனர். கோர்ட்டும் தீர்ப்பு வழங்கி விட்டது. இது அனைத்து ஊடகங்கள், செய்தித்தாள்களில் வந்து விட்டது. இதற்கு மேலும் என்ன சந்தேகம் என்பது தெரியவில்லை.
தற்போது கடுமையான கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாக, மின்சார வாரிய தொழிலாளர்கள் வீடு வீடாக சென்று மின்கணக்கீடு செய்ய முடியாது என்று தெரிவித்து விட்டார்கள். எனவே மொத்தமாக 4 மாதமாக சேர்த்து கணக்கீடு செய்தனர். 4 மாத கட்டணத்தையும் எடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த கட்டணம் 2 ஆக பிரிக்கப்பட்டது. 4 மாதத்துக்கு சுமார் 800 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி இருந்தால் அதை 2 ஆக பிரித்து 400 யூனிட்டாக பிரித்து, 100 யூனிட் கழிக்கப்படுகிறது. மீதி 300 யூனிட்டுக்குத்தான் பணம் செலுத்த வேண்டும். இவ்வாறு பிரிக்கும்போது 500 யூனிட்டுக்கு மேல் வந்தால் கட்டணம் அதிகமாகும். அப்படி அதிகமாகும் கட்டணத்தை அடுத்த மாத கணக்கெடுப்பில் குறைவாக வந்தால், அந்த நேரத்தில் கழிக்கப்படும் என்ற அரசின் விளக்கத்தை கோர்ட்டு ஏற்று உள்ளது. தீர்ப்பும் கிடைத்து விட்டது. எனவே வேண்டும் என்றே ஏதேனும் ஒரு காரணத்தை காட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்று இதை காரணம் காட்டுகிறார்கள்.
கேள்வி: கொரோனாவால் அரசு ஊழியர்கள் இறந்தால் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அப்படி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே?
பதில்: மருத்துவம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும். மற்ற துறைகளை சேர்ந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த, அதாவது நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்று அதன் மூலம் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும். காரணம் அவர்களின் அர்ப்பணிப்பு. வாரிசுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.
மற்ற துறைகளான காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் வைரஸ் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது பாதிப்பு ஏற்பட்டு இறந்தால் அவர்களுக்கு ரூ.25 லட்சம் மற்றும் வாரிசுக்கு வேலை வழங்கப்படும்.
கேள்வி: சேலம் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வருவது உண்மையா?
பதில்: தவறான தகவல். இனி மேல் தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டமும் பிரிக்கப்பட மாட்டாது.
கேள்வி: முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளது. இது கூடுதல் நாட்களாக அதிகரிக்குமா?
பதில்: ஊரடங்கு நாட்களை அதிகரிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை. அவ்வாறு தகவல்கள் வந்தால் அவற்றை பரப்பாமல், உண்மை தகவல்களை பரப்ப வேண்டும். இதற்கு பத்திரிகை, ஊடகங்கள் உதவி செய்ய வேண்டும். சரியான தகவல்கள் மக்களை சென்று சேர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த சரியான நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. கொரோனா காலத்திலும் நாட்டிலேயே அதிக முதலீட்டை தமிழகம் ஈர்த்து முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது.
சென்னை காவல் நிலைய எல்லையில் சாலையோரத்தில் ஒரு சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது, தலையில் கவசம் அணிந்து கொண்டு ஆட்டோ ஓட்டி வந்த வாலிபர் ஒருவர் அந்த சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து கடத்திச்செல்ல முயன்றார். ஆனால், அதற்குள் சுதாகரித்துக்கொண்ட சிறுமி, அந்த ஆட்டோ ஓட்டுனரின் கையை கடித்து விட்டு தப்பித்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் திறமையாக செயல்பட்டு அந்த ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.
இந்த செய்தி அறிந்த உடன் நான் உடனடியாக சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வாலை தொலைபேசியில் அழைத்தேன். அந்த சிறுமியை நேரில் அழைத்து சிறுமியின் தைரியத்தையும், சமயோசித அறிவையும் பாராட்டி வாழ்த்து தெரிவிக்க கேட்டுக்கொண்டேன். காவல் ஆணையாளரும் சிறுமியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
காவல்துறைக்கு எனது பாராட்டுகளை இந்தநேரத்தில் தெரிவிக்கிறேன். தமிழக அரசு பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் அரணாக இருக்கும். காவல்துறையும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டங்களில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், “அத்திக்கடவு-அவிநாசி திட்டம், அடுத்த ஆண்டு டிசம்பரில் முடிவடையும் என்றும், பவானிசாகரில் 7 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும்“ கூறினார்.
சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கட்டிடம், ஓடாநிலையில் கட்டப்பட்டுள்ள தீரன் சின்னமலை கலையரங்க கட்டிடம் என மொத்தம் ரூ.21 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டிலான 13 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்த கட்டப்படவுள்ள 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி, அரச்சலூர், ஓடாநிலையில் அமைக்கப்படவுள்ள தீரன் சின்னமலை முழு உருவச்சிலை என மொத்தம் ரூ.76 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு படிப்படியாக செயலாக்கிக் கொண்டிருக்கிறது.“ என்று தெரிவித்தார்.