ரூ.447 கோடி செலவில் ஊட்டியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் புதிய அரசு மருத்துவக்கல்லூரி: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

ரூ.447 கோடி செலவில் ஊட்டியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

Update: 2020-07-10 22:02 GMT
சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக்கல்லூரிகளை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 10 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த வகையில், 11-வது மருத்துவக்கல்லூரியாக நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட உள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு காணொலிக்காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இந்த புதிய அரசு மருத்துவக்கல்லூரி நிறுவிட ரூ.447 கோடியே 32 லட்சம் அனுமதித்து நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.195 கோடி நிதியும், தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.130 கோடி நிதியுடன், கட்டிடங்கள் கட்டுவதற்காக கூடுதலாக ரூ.122 கோடியே 32 லட்சம் நிதியும் வழங்கப்படும். முதல் கட்டமாக தமிழக அரசால் ரூ.110 கோடி நிதியும், மத்திய அரசால் ரூ.50 கோடி நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் ரூ.141 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலும், மருத்துவமனை கட்டிடங்கள் ரூ.130 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதி கட்டிடங்கள் போன்றவை ரூ.175 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்படும். நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் நிறுவப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்