‘பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை அ.தி.மு.க. அரசு காக்கும்’ அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

வளமான பிரிவினருக்கு (கிரீமிலேயர்) உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் கூறி இருப்பதாகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை காக்கும் அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-09 23:00 GMT
சென்னை,

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இளநிலை, முதுநிலைமருத்துவம் மற்றும் பல் மருத்துவப்படிப்புகளில் பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும், பட்டியல் பிரிவினருக்கு 15 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு 27 சதவீதம் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 50.5 சதவீதம் என்ற இட ஒதுக்கீட்டுமுறையை மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அதாவது, எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு கடைபிடித்து வருகிறது.

அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் சலோனி குமாரி மற்றும் ஒருவர் தொடர்ந்த வழக்குநிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடுஅரசும் ஒரு மனுதாரராக தன்னை சேர்த்துக்கொண்டது.

இப்பொருள் தொடர்பாக கடந்த 6.6.2020 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் ஒரு கலந்தாய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு அரசினால் ஒப்பளிக்கப்படும் இடங்களில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவதைப்போல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி (பிற்படுத்தப்பட்டோர் 30 சதவீதம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 சதவீதம்) சுப்ரீம் கோர்ட்டில் தனியாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கினை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தனது 11.6.2020 நாளிட்ட தீர்ப்பில் இக்கோரிக்கை தொடர்பாக மனுதாரர்களை ஐகோர்ட்டை அணுகுமாறு அறிவுறுத்தியது. இதே கோரிக்கையை வலியுறுத்தி ஐகோர்ட்டிலும் தனியாக ஒரு வழக்கு கடந்த 16.6.2020 அன்று தமிழ்நாடு அரசால் தொடரப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின்அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. மண்டல்குழு வழக்குகளில் இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததால், 69 சதவீத இடஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்தும் பொருட்டு, ஜெயலலிதாவின் அரசு 1993-ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு (கல்விநிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ்வரும் பணிகளில் நியமனங்கள் அல்லது இடங்களை ஒதுக்கீடு செய்தல்) சட்டத்தினை நிறைவேற்றியது.

பின்னர், அரசமைப்புச்சட்டத்தின் 31-பி-ன்கீழ் பாதுகாப்பு பெறும்பொருட்டு, தமிழ்நாடு சட்டம் 45/1994, இந்திய அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு முறையில், கல்வி நிலையங்களில் மாணவ- மாணவியர் சேர்க்கை மற்றும் மாநில அரசின் கீழ்வரும் பணிகளில் நியமனங்கள் ஆகியவற்றில் வளமான பிரிவினரை (கிரீமிலேயர்) நீக்கம் செய்யாமல், 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இடஒதுக்கீடு சமூக, கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படவேண்டும். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கு குந்தகத்தை விளைவிக்கும் என கருதப்படுகிறது. மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் மத்திய அரசு பணிகளில் இதரபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டில், வருமான உச்சவரம்பில், ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், தற்போது பின்பற்றப்பட்டு வரும் வளமான பிரிவினருக்கு உள்ள நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று பிரதமரை, முதல்-அமைச்சர் கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.

ஜெயலலிதாவின் அரசு சமூக நீதியை காப்பதுடன் பிற்படுத்தப்பட்ட, ஏழை-எளிய மக்கள் நலனை காப்பதிலும் முன்னோடி அரசாக உள்ளது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். ஜெயலலிதாவின் வழியில் அவருடைய அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை என்றென்றும் காக்கும் அரணாக விளங்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்