சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் வாலிபர் இறந்ததாக வழக்கு: உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் வாலிபர் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-07-08 22:00 GMT
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த வடிவு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மகன்கள் துரை (வயது 35), மகேந்திரன் (28) ஆகியோர் பாப்பான்குளத்தில் தங்கி கட்டிட வேலைக்கு சென்றனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் 18-ந்தேதி தெற்கு பேய்குளம் அருகே ஜெயக்குமார் என்பவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை பற்றி விசாரிக்க, எனது மூத்த மகனை தேடி என் வீட்டுக்கு கடந்த மே 22-ந்தேதி சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் உள்பட போலீசார் வந்தனர். இங்கு இல்லை என தெரிந்ததும், மறுநாள் பாப்பான்குளத்திற்கு சென்று மகேந்திரனை போலீஸ் நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கடுமையாக தாக்கினர். துரை சரணடையும் வரை மகேந்திரனை விடுவிக்க முடியாது என்றனர்.

24-ந்தேதி இது குறித்து யாரிடமும் புகார் செய்யக்கூடாது என மிரட்டி அவரை விடுவித்தனர். அடுத்த சில நாட்களில் எனது மூத்த மகன் துரை, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று தனக்கும் கொலை சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார். ஆனால் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

போலீசார் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மகேந்திரனை பரிசோதித்த டாக்டர்கள், அவரின் மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாக தெரிவித்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி எனது மகன் உயிரிழந்தார். எனது மகன் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தேன். அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாத்தான்குளம் தந்தை- மகன் இறப்பை மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து விசாரிக்கிறது. அதுபோல சட்டவிரோத காவலில் வைத்து தாக்கியதால் எனது மகன் இறந்ததற்கு காரணமான போலீசார் மீதும் உரிய விசாரணை நடத்திடவும், எனக்கு உரிய பாதுகாப்பு அளிக் கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து உள்துறை செயலாளர், டி.ஜி.பி., தூத்துக்குடி கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படியும், இந்த வழக்கை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்