வைப்பீட்டாளர்கள் பயன்பாட்டுக்கு மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் ‘செயலி’ - புதிய வலைதளம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் வைப்பீட்டாளர்களின் நலனிற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைதளம் மற்றும் செல்போன் செயலியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2020-07-08 23:00 GMT
சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுக்கு முழுவதும் சொந்தமான பொதுத்துறை நிறுவனமாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், ஒரு வங்கி சாரா நிதி நிறுவனமாக (வைப்பீடு) 1991-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவினால் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், பொதுமக்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வைப்பீடுகள் மூலம் நிதி திரட்டி வருகிறது.

இந்த நிறுவனம் பொது நிதி நிறுவனமாக 10 லட்சத்திற்கும் மேலான வைப்பீட்டாளர்களுக்கு பொதுத்துறை வங்கிகளைவிட அதிக வட்டியை அளித்து வருகிறது. தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் வைப்பீட்டாளர்களின் நலனிற்காக, அதன் செயல்பாடுகளை தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி ‘ஆன்லைன்’ மூலமாக செயல்படுத்திடும் வகையில் www.tnp-ow-e-r-f-i-n-a-n-ce.com என்ற புதிய வலைதளமும், ‘டிஎன்பிஎப்சிஎல்’ என்ற செல்போன் செயலியும் (ஆப்) உருவாக்கப்பட்டுள்ளது.

இப்புதிய வலைதளத்தையும், கைப்பேசி செயலியையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இப்புதிய வலைதளத்தின் மூலமாக முதல்-அமைச்சர், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திலுள்ள 8 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.30 கோடி நிதியை வழங்கினார். இப்புதிய வலைதளத்தின் மூலம், வைப்பீட்டாளர்கள் வைப்பீட்டு கணக்கை தொடங்குதல், புதுப்பித்தல், முதிர்வடைந்த வைப்பீட்டு தொகையை பெறுதல், வைப்பீட்டு தொகையின் மூலம் கடன் பெறுதல், மாற்றாளர் (நாமினிகள்) பெயர் மாற்றம் செய்தல், வங்கி விவரங்களை புதுப்பித்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதல்-அமைச்சரிடம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்