சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: வழக்குப்பதிவு செய்தது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Update: 2020-07-08 07:38 GMT
புதுடெல்லி,

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை துவங்க சிபிஐ, குழு ஒன்றையும் அமைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  இன்னும், சில தினங்களில் சிபிஐ குழு சாத்தான்குளம் வந்து விசாரணையை துவங்கும் எனக் கூறப்படுகிறது.  சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததை தொடர்ந்து, வழக்கு விவரங்களை சி.பி.சி.ஐ.டி. ஒப்படைக்கும் எனத்தெரிகிறது.

சாத்தான் குளம் சம்பவத்தின் முழு விவரம்;


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை- மகனுமான ஜெயராஜ் (வயது 58), பென்னிக்ஸ் (31) ஆகியோர் ஊரடங்கு காலத்தில், கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக திறந்து வைத்திருந்த குற்றச்சாட்டில், கடந்த மாதம் 19-ந்தேதி இரவு கைது செய்யப்பட்டனர்.

பின்னர், சாத்தான்குளம் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இருவரும் அங்கு கடுமையாக தாக்கி சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. ஜூன் 20-ந்தேதி அதிகாலை சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், 22-ந்தேதி பென்னிக்சும், 23-ந்தேதி ஜெயராஜூம் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் சாத்தான்குளம் மட்டுமல்லாது, தமிழகத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் உத்தரவின்பேரில் கடந்த மாதம் 28-ந்தேதி, கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளம் காவல் நிலையம் சென்று விசாரணை நடத்தினார். ஆனால், அவரது விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லை. அதேநேரத்தில், தலைமை பெண் காவலர் ரேவதி, ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது நடந்தது என்ன? என்பது குறித்து பரபரப்பு சாட்சியம் அளித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகவும், சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுக்கும் வரை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த ஐகோர்ட்டு மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டது.

அதன்படி, நெல்லைசி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் உடனடியாக விசாரணையை தொடங்கினார்.  விசாரணையை தொடர்ந்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக மேலும் 5 காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்