முககவசம் இல்லாமல் மீன் மார்க்கெட் உள்ளே யாரையும் அனுமதிக்கக்கூடாது - அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்
முககவசம் இல்லாமல் மீன் மார்க்கெட் உள்ளே யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று மீனவ பிரதிநிதிகளுக்கு, ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை,
சென்னையில் மீன் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பெருநகர மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில், மீன் வியாபாரிகள், விசைப்படகு உரிமையாளர்கள், மீன் ஏற்றுமதியாளர்கள், மீனவர் சங்கத்தினர் உள்ளிட்ட மீனவ பிரதிநிதிகளிடம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் கொரோனா நோய் கட்டுக்குள் இருக்கிறது. பொதுமக்களுக்கு புரத சத்து கிடைக்கும் வகையிலும், நோய் தொற்று ஏற்படாதவாறு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், ஊரடங்கு தளர்வில், மீன் மார்க்கெட்டுகள் இயங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
முககவசம், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வோம் என்று ஆலோசனையில் பங்கேற்றவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதே சமயத்தில் கொரோனா தடுப்பு முயற்சியில் அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். சென்னையில், 9 பிரதான மீன் மார்க்கெட்டுகள் உள்ளன. அதில் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக மீன் வாங்குபவர்கள் நிற்கும் வகையில் வட்டம் போடவேண்டும். பொதுமக்கள் வந்து, செல்வதற்காக தனித்தனியாக பாதை அமைக்கப்படவேண்டும். அதில், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளி பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அனைத்து மார்க்கெட்டுகளிலும் நுழைவாயிலில், கைகளை சுத்தம் செய்யும் வகையில் கிருமிநாசினி வைத்திருக்கவேண்டும். முககவசம் இல்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்பதை கண்டிப்புடன் பின்பற்ற அறிவுறுத்தியிருக்கிறோம். காசிமேடு மீன் மார்க்கெட்டில், பொதுமக்கள், சில்லரை வியபாரிகளுக்கு அனுமதியில்லை. மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.