மின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக தி.மு.க. விஷம பிரசாரம் அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு

மின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக அரசு மீது தி.மு.க. விஷம பிரசாரம் செய்வதாக அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2020-07-06 22:00 GMT
சென்னை,

தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகத்தில் மனித குலத்திற்கே அச்சம் விளைவிக்கின்ற கொள்ளை நோய் கொரோனாவிலிருந்து தமிழக மக்களை காத்திட இரவு, பகல் பாராது ஒட்டுமொத்த அரசும் ஓயாது உழைத்துவரும் வேளையில், தன் அரசியல் இருப்பை காட்டவும், தமிழக அரசின் மீதான வெறுப்பை கக்கவும், அறிக்கைகளை நாளொன்றும் விடுத்து வருகிற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்தின் பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட திட்டமிட்டு, அதனை தங்கள் ஆட்சி காலத்து 18 மணி நேர அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டை நினைவு கூறும் விதத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பெயரில் வெளியிட்டிருக்கிறார்.

ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே இருப்பதற்கு ஏதுவான நிலையை உருவாக்கியது, மின்தடை என்கிற சொல்லுக்கே அவசியமில்லா காலத்தை உருவாக்கிய அ.தி.மு.க. அரசு என்பதோடு, மின்கட்டணத்தை செலுத்துவதற்கான நெடிய அவகாசத்தை வழங்கியதும் கனிவுடைய அ.தி.மு.க. ஆட்சிதான். இதுவே தி.மு.க. ஆட்சியாக இருந்தால், அன்று அவர்கள் உருவாக்கி வைத்திருந்த தொடர் மின்வெட்டு சூழல், ஊரடங்கு என்பதையே இன்று கேலி பொருளாக்கியிருக்கும்.

ஆனால், மிகைமின் உற்பத்தி செய்கிற அளவிற்கு தமிழகத்தை மேன்மைமிக்க நிலையில் உயர்த்திக்காட்டியிருக்கும் அ.தி.மு.க. அரசு, இப்படி மின்கட்டணம் மட்டுமில்லாது, கூட்டுறவு வங்கிகளில், நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பெற்ற கடன்களுக்கான மாதாந்திர கடன் தவணைகளையும் அவற்றை செலுத்துவதற்கான கால அவகாசத்தை உருவாக்கி கொடுத்து இடர் மிகுந்த இக்காலத்தை கடக்கவும், இன்னலுறும் மக்களுக்கு உதவிடவும் பேருதவி செய்து, பெரும் துணையாக நிற்கிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்ட காலத்தில் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருமே வீடுகளில் இருந்ததாலும், அதனால் அவர்கள் பயன்படுத்தும் மின் அளவு கூடுதலாக இருக்கும் என்பது இயல்பு.

மேலும், கொரோனா காலத்தில் வீடுகள், மற்றும் அலுவலகங்களுக்கு சென்று பயன்படுத்தப்பட்ட மின்சார அளவை கணக்கெடுப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களை கருத்தில் கொண்டு முதல் மாதத்தில் எடுக்கப்பட்ட மின் உபயோக அளவையே அடுத்தடுத்த மாதங்களுக்கு கணக்கிட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை கூடுதலாக வசூலிக்கிறார்கள் என்கிற உணர்வையும், அவப்பழியையும் அரசு மீது சுமத்த தி.மு.க. தொடர்ந்து திட்டமிட்டு, விஷம பிரசாரம் செய்து வருகிறது.

கூடுதல் கட்டணம் வந்திருப்பதாக குறிப்பிடப்படும் நபருக்கும் தெரியும், அதற்காக முறையீடு செய்து தனக்கான நியாயத்தை பெறுவதற்கான வழிமுறைகள் மின்சார வாரியத்தில் நுகர்வோர் குறைதீர்ப்பில் இருக்கிறது என்பதோடு, தவறிழைக்கப்பட்டிருந்தால் அதற்கான சட்ட முறையீடும் மின் பயனீட்டாளர்களுக்கு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.

அரிசியில் இருக்கிற ஒரு கல்லை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த அரிசியையும் கல் என்று சித்தரிக்கப் பார்ப்பது தி.மு.க.வின் கடைந்தெடுத்த அரசியல் மோசடியாகும். விவசாயத்திற்கு பயன்படுத்தும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமென போராட்டம் நடத்திய விவசாய பெருங்குடி மக்களை, குருவி சுடுவதைபோல சுட்டு வீழ்த்தியது அன்றைய தி.மு.க. ஆட்சி. இப்படி கொடுங்கோல் ஆட்சி நடத்திய தி.மு.க.வின் வரலாறு தெரியாதா?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்