திருச்சி அருகே பயங்கரம்: பள்ளி மாணவி எரித்துக்கொலை பொதுமக்கள் மறியல்; ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு

திருச்சி அருகே பள்ளி மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.

Update: 2020-07-06 21:30 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவருடைய மகள் கங்காதேவி (வயது 14). எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில், அந்த மாணவி நேற்று மதியம் 12 மணியளவில் சக தோழிகளுடன் விளையாடினாள்.

பின்னர் வீட்டுக்கு சென்ற அவள், வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்துக்கொண்டு முள்காட்டில் கொட்ட சென்றாள். அதன்பிறகு மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவளை பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது குப்பை கொட்டச் சென்ற முள்காடு பகுதியில் சிறுமி, உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தாள். அவளை மர்ம நபர்கள் சிலர் மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுமி அணிந்திருந்த இரவு உடை கிழிந்திருந்தது. இடுப்புக்கு மேல் முழுவதும் எரிந்து போய் இருந்தது. பின்னர் சிறுமியின் உடலை போலீசார் மீட்க முயன்றபோது, கிராம மக்கள் ஒன்று திரண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்யும்வரை பிணத்தை எடுக்க விட மாட்டோம் என்று மறியலில் ஈடுபட்டதோடு ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்தனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன்பேரில் சமாதானம் அடைந்தனர். பின்னர் சிறுமியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது தெரிய வரும். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்கும்பொருட்டு அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தற்போது மற்றொரு மாணவி கொலை செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா நிருபர்களிடம் கூறியதாவது:-

உடல் முழுவதும் தீயில் எரிந்த காயங்களுடன் சிறுமி கிடந்துள்ளார். அவரது உடலில் உள்ள தீக்காயங்கள் குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் உரிய ஆலோசனை கேட்போம். இதுகுறித்து 5 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டு விட்டது.

மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் கண்டிப்பாக என்ன நடந்தது என்பதை தீவிர விசாரணை நடத்துவோம். சிறுமியின் இந்த நிலைக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்களை சும்மா விடமாட்டோம். நிச்சயமாக தண்டனை வாங்கி தருவோம். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பது மனதை கஷ்டப்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கிறதோ? அப்போது தான் நாம் முழு சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது? என்ற விவரம் முழு விசாரணைக்கு பிறகு தான் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்