என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-06 14:02 GMT
நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.  

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த என்.எல்.சி. நிரந்தர தொழிலாளி சிவக்குமார் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.

அதனை தொடர்ந்து நேற்று மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கும் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை வழங்கப்படும் என என்.எல்.சி.. நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்