மின் கட்டணம் குறித்து உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிடுவதா? - திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் தங்கமணி கண்டனம்

மின்கட்டணம் குறித்து உண்மைக்கு மாறான அறிக்கையை திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வெளியிடுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-06 12:26 GMT
சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மின்கட்டணம் கணக்கீடு செய்ய முடியாததால், ஊரடங்கு காலத்திற்கு முந்தைய மின் பயன்பாட்டின் அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மின்சார கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை நடப்பதாக குற்றம் சாட்டினார்.

ஓடாத நிறுவனங்களிடமும் மின் கட்டணம் வசூல் என்ற பெயரில் வழிப்பறி நடப்பதாக தெரிவித்த அவர், மின்சார கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்து மக்களையும் தொழில்முனைவோரையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி தெரிவித்த கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட மின் அளவை கணக்கிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.

முதல் மாதத்தில் எடுக்கப்பட்ட மின் உபயோக அளவை கணக்கிட்டு அடுத்தடுத்த மாதங்களில் வசூல் செய்யப்படுவதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என்று அவர் கூறினார். மேலும், “கூடுதலாக மின்கட்டணம் வசூலிப்பதாக அரசு மீது அவப்பழியை சுமத்துவதா?” என்று கேள்வி எழுப்பிய அவர், மின் கட்டணம் குறித்து உண்மைக்கு மாறான அறிக்கையை செந்தில் பாலாஜி வெளியிடுவதாகக் கூறி அவருக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்