தமிழக ஆளுநருடன் முதல் அமைச்சர் சந்திப்பு; கொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் விவகாரம் குறித்து விளக்கம்
தமிழக ஆளுநர் பன்வாரிலாலை முதல் அமைச்சர் பழனிசாமி ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்து பேசினார்.
சென்னை,
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மாதந்தோறும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும், அதற்கு அரசு சார்பில் வழங்கி வரும் நிவாரணம் பற்றியும் ஆளுநரிடம் எடுத்து கூறினார். கடந்த மார்ச் 31ந்தேதி, மே 4ந்தேதி மற்றும் ஜூன் 2ந்தேதி ஆகிய நாட்களில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆளுநரை சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து அவர் இன்று ஆளுநரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், தந்தை, மகன் மரணம் அடைந்த விவகாரம் பற்றியும், அதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கை பற்றியும் அவர் விளக்கம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது. அரசு பணியில் பயன்பெற தமிழக மாணவர்களுக்கு, நீட் தேர்வில் இடஒதுக்கீட்டுக்கான அவசர சட்டம் பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது என கூறப்படுகிறது.
இதுபற்றிய அறிக்கைகளை அவர் ஆளுநருடன் சமர்ப்பித்து உள்ளார். ஆளுநருடனான முதல் அமைச்சரின் சந்திப்பில், தமிழக தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.