மதுரையில் முழு ஊரடங்கு தேவைப்படும் பட்சத்தில் முதல்வரே அறிவிப்பார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரையில் தேவைப்படும் பட்சத்தில் முழு ஊரடங்கு உத்தரவு குறித்து முதல்வரே அறிவிப்பார் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-21 09:00 GMT
மதுரை,

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு தானியங்கி, கை சுத்திகரிப்பான் கருவியை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“அனைத்து அரசு அலுவலகங்களிலும் சோப்பு போட்டு கைகழுவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அவ்வாறு செயல்படுத்த முடியாத அலுவலகங்களில் கை சுத்திகரிப்பு கருவியை பொருத்துவதற்காக தற்போது முயற்சி எடுத்துள்ளோம். மாநகர எல்லையில் இருக்கும் 27 காவல் நிலையங்களுக்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை தினந்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று அதிகரிப்பு குறித்து முதல்வர் தொடர்ந்து கேட்டு வருகிறார். நிலைமைக்கு ஏற்றவாறு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார். எந்த அறிவிப்பாக இருந்தாலும் முன் கூட்டியே அறிவிக்கப்படும்” என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்