தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Update: 2020-06-20 13:13 GMT
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,845 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 180 பேருக்கும், திருவள்ளூரில் 131 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 87 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் திருவண்ணாமலையில் 125 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் இன்று அதிகபட்சமாக 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 38 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சை முடிந்து இன்று 1,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்ப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,316 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 24,822 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 33,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,61,211 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்