எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ரத்து: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

Update: 2020-06-09 20:30 GMT
சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்கட்சிகள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்கிற வகையில் 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததோடு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. ஐகோர்ட்டில் தமிழக அரசின் முடிவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த முடிவை தமிழக அரசு எடுத்து இருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு காலம் தாழ்ந்து எடுக்கப்பட்டதாக இருந்தாலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது“ என்று தெரிவித்து உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவால் அனைவரும் பயனடைவார்களே தவிர, யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருப்பதால் மேல்நிலை வகுப்புகளின் மாணவர் சேர்க்கையில் எந்த குழப்பமும் ஏற்படாது” என்று தெரிவித்து உள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவமாணவிகளும் தேர்வு பெற்றதாக முதல்அமைச்சர் அறிவித்து உள்ளார். மேலும் 11-ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருப்பது எல்லை இல்லாத மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு எச்சரிக்கை மணி அடித்த சென்னை ஐகோர்ட்டுக்கு தலைவணங்கி நன்றி செலுத்துகிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர், இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருக்கிறது. காலம் கடந்தாவது மக்கள் உணர்வை ஏற்றுக் கொண்ட மாநில அரசின் முடிவு வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்து உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இல்லை என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்துள்ளது. பல லட்சம் மாணவர்களை நோய் தொற்றில் இருந்து காப்பாற்றும் இம்முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.” என்று தெரிவித்து உள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று பரவல் சூழலில், 10, 11-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொது தேர்வு குறித்த பயத்தில் இருந்த பலரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மாணவ மாணவிகளை தேர்வின்றி தேர்ச்சி செய்து சிறப்பான முடிவை அறிவித்திருக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்று தமிழக முதல்அமைச்சர் அறிவித்து உள்ளார். 11-ம் வகுப்பில் உள்ள நிலுவை தேர்வையும் ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பிற்கான நிலுவையில் உள்ள தேர்வை சூழலுக்கு ஏற்றவாறு அறிவிப்போம் என்று சரியான நேரத்தில், சரியான முடிவை எடுத்து இருக்கும் தமிழக அரசை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திருநாவுக்கரசர் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் சா.அருணன் உள்ளிட்டோரும் தமிழக அரசின் முடிவை வரவேற்று அறிக்கை அனுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்