கொரோனா காலத்தில் கட்டணம் வசூல்; பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தி வரும் காலத்தில் கல்வி கட்டணம் வசூலில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-06-08 10:53 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன.  எனினும், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலில் உள்ள காலத்தில், பள்ளிகள் தங்களிடம் படிக்கும் மாணவ மாணவியர்களிடம் கல்வி கட்டணம் செலுத்த கூறி கட்டாயபடுத்த கூடாது என ஏற்கெனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.  இந்த நிலையில், சில பள்ளிகள் தங்களிடம் பயிலும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் செலுத்தும்படி அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

கோவையில் ஒரு பள்ளி, சென்னையில் 3 பள்ளிகள் இதுபோன்ற கட்டண வசூலை இலக்காக கொண்டு செயல்படுவது பற்றி புகார்கள் எழுந்தன.  அவற்றுக்கு எதிராக கண்டனங்களும் எழுந்தன.

இதுபற்றி பேசிய தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த பள்ளிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  அரசின் உத்தரவை மீறி, கொரோனா காலத்தில் கல்வி கட்டணம் வசூலில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்