தொழில் அனுமதி பெறும் வழிமுறைகள் எளிதாக்கப்படும் ‘காணொலி’ மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியில் தமிழ்நாடு முன்னிலை, தமிழகத்தில் தொழில் அனுமதிகள் பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2020-06-06 23:00 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்துவது தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் நேற்று ‘ஒளிரும் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் காணொலி மூலம் மாநாடு நேற்று நடத்தப்பட்டது. புதிய இயல்பு சூழ்நிலையில் முதன்மை மாநிலமாக மாறுவதற்கான இந்த டிஜிட்டல் மாநாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:-

சமீபத்தில் வெளியான ‘இலாரா செக்யூரிட்டீஸ்’ நிறுவனத்தின் ஆய்வில் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. மிகவும் தொழில் மயமான மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்கள் பின்தங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு இயல்பு நிலையை நோக்கி படிப்படியாக முன்னேறி வருவதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, பிணை சொத்தின்றி உடனடி கடன் வழங்கும் கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை ரூ.200 கோடி ஒதுக்கி, கடந்த மார்ச் 31-ந் தேதி அறிவித்தேன். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 955 நிறுவனங்களுக்கு ரூ.120 கோடி செயல்பாட்டு மூலதனக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. உடனுக்குடன் கடன் தொகைகளை வழங்க வங்கியாளர்களை அறிவுறுத்தியுள்ளேன்.

உலக பொருளாதார சூழலில் கொரோனா ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளன.

இந்நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக, சமீபத்தில் தொழில்துறை சார்பில், ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்சு, கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்களுடன், அவர்களது புதிய மற்றும் விரிவாக்க தொழில் திட்டங்களை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

இத்திட்டங்கள் மூலம் ரூ.15 ஆயிரத்து 128 கோடி முதலீட்டில் சுமார் 47 ஆயிரத்து 150 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த நிகழ்ச்சி, உலகத்தின் பார்வையை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பி உள்ளது.

உலகளவில் பல்வேறு தொழில் துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் தலைமை அதிகாரிகளுக்கு, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன்.

அரசின் செயல் திட்டமாக, நான்கு முக்கிய இனங்களில் கவனம் செலுத்த அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன். அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலையை விரைவாக அடைந்திட உதவி புரிதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல், அரசு அனுமதிகள் மற்றும் நடைமுறைகளை மேலும் எளிதாக்குதல், கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி, தொழில்களுக்கு தேவையான பணப்புழக்கத்தினை அதிகரித்தல் ஆகிய செயல்பாடுகளில் முனைப்புடன் ஈடுபடுவதன் மூலம் புதிய தொழில்களும், ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொழில்களும், மேலும் சிறப்புடன் செயல்படவும், கொரோனா நமக்கு இட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள இயலும்.

வெளிமாநில தொழிலாளர்கள் பலர் சொந்த மாநிலத்திற்கு சென்றுள்ளனர். என்றாலும், தொழில் உற்பத்தி பாதிப்படையாமல் இருக்க, தமிழ்நாட்டைச் சார்ந்த தொழிலாளர்களை பயன்படுத்தி இயல்பு நிலையை எய்த, தொழில் துறையினர் முயற்சிக்க வேண்டும்.

வணிகம் புரிதலை எளிதாக்கிட, மாவட்ட அளவிலும் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, தொழிலாளர் துறை, மருந்தியல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவையிடம் இருந்து, தொழில் அனுமதிகள் பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில், தொழில் முதலீட்டிற்கான சாதகமான சூழ்நிலை மேலும் வலுவடையும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்