ஊரடங்கு எதிரொலி: வீடுகளில் ரம்ஜான் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
ஊரடங்கு உத்தரவு எதிரொலியால் முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகையை தங்கள் வீடுகளிலேயே நடத்தினர்.
சென்னை,
முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். இதனை ஈகை திருநாள் என்றும் குறிப்பிடுவர்.
ரமலான் மாதத்தில் சந்திரன் பிறை காணும் நாளுக்கு அடுத்த நாளை ரம்ஜான் பண்டிகையாக கொண்டாடுவார்கள். முன்னதாக ஒரு மாத காலம் நோன்பு இருப்பார்கள். நோன்பு முடிந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் தினத்தன்று புத்தாடைகள் அணிந்து பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்திவிட்டு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள்.
அதன்படி, இந்த ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்காக கடந்த ஏப்ரல் 24-ந்தேதி முதல் முஸ்லிம்கள் நோன்பு கடைபிடித்தனர். ஆனால், கடந்த மார்ச் 23-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி வாசல்களில் தொழுகை நடத்த முடியவில்லை.
இந்த நிலையில் அவர்களின் நோன்பு நேற்று முன்தினம் நிறைவடைந்து நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகையையொட்டி வழக்கமாக பள்ளிவாசல்கள் மற்றும் தீவுத்திடல் போன்ற பொது இடங்களில் நடைபெறும் தொழுகைகளுக்கு ஊரடங்கு உத்தரவால் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டு முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை தங்கள் வீடுகளிலேயே தொழுகை செய்து நிவர்த்தி செய்தனர்.
ஒரு குடும்பத்தினர் மட்டும் தொழுகை நடத்தும்போது தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே நடத்திக் கொண்டனர். சிலர் தங்கள் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து வீட்டின் மொட்டை மாடிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து ரம்ஜான் தொழுகைகளை நிறைவேற்றிக் கொண்டனர். வழக்கமாக ராயபுரம் டான்போஸ்கோ பள்ளிக்கூடம், தீவுத்திடலில் நடைபெறும் ரம்ஜான் தொழுகை இந்த ஆண்டு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.