தேர்வு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் - பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை அறிவிப்பு

தேர்வு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும், வருகிற 20-ந்தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2020-05-16 22:15 GMT
சென்னை, 

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசுத் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டு இருக்கும், சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அந்தந்த பள்ளிகளே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மையங்களாக செயல்படும் என்ற விவரத்தினையும், புதிய தேர்வு அட்டவணையையும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர் அறியும் வண்ணம் பள்ளிகளில் ஒட்டப்படுவதோடு, அவர்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வகுப்பாசிரியர்கள் தெரிவிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* ஒரு அறைக்கு 10 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளவாறு போதுமான அறைகள் மற்றும் தேவையான டெஸ்க், இருக்கைகள் உள்ளதா? என்ற விவரத்தினையும், தேர்வு எழுத உள்ள பள்ளிக்கு மாணவர்களாகவே வருகை தந்துவிடுவார்களா? போக்குவரத்து வசதி தேவைப்படுகிறதா? என்ற விவரத்தினையும் பெற்றோர்களிடம் இருந்து பெற்று வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் பணி

* வெளியூர் சென்று இருந்தால் ஆசிரியர்கள் வருகிற 20-ந்தேதிக்குள் பள்ளிகளுக்கு திரும்பி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு தொடங்கும் நேரத்துக்கு முன்னதாக வரும் மாணவர்கள் உட்கார்ந்திருக்கும் வகையில் கூடுதல் வகுப்பறைகள் இருக்குமாறு பார்த்துகொள்ள வேண்டும்.

* பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் விவரங்களையும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

* தேர்வு எழுதும் மாணவர்கள் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருப்பின் அவர்கள் அனைவரையும் 25-ந்தேதிக்குள் அவர்களின் இருப்பிடத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் வரவழைக்க வேண்டும். இதற்கான இ-பாஸ் பெற இணையதளத்தில் தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

* மேற்கண்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். இதில் எந்தவித சுணக்கமும் கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்