கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஆம்னி பஸ் கட்டணம் இருமடங்கு உயர்கிறதா? - பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பதில்
கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஆம்னி பஸ் கட்டணம் இருமடங்கு உயரும் என்று ஒரு சங்கமும், மற்றொரு சங்கம் இதுவரை உயர்த்தவில்லை என்றும் கூறுகின்றன.
சென்னை,
கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து அனைத்தும் முடங்கிப்போய் இருக்கின்றன. அரசு போக்குவரத்து கழகம் இயக்கும் பஸ்கள் இருந்தாலும், ஆம்னி பஸ்களின் சேவையையும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த ஊரடங்கால் ஆம்னி பஸ் சேவையும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் அதன் உரிமையாளர்களும், அதனை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர். ஊரடங்கு முடிந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டாலும் 50 சதவீத பயணிகளுடன் தான் இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் பஸ் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த இருப்பதாகவும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அப்சல் கூறியதாவது:-
50 சதவீத பயணிகளுடன் இயக்கும்போது, எங்களுக் கான செலவை சரிசெய்ய கட்டணத்தை இருமடங்காக தான் உயர்த்த வேண்டும். இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அரசு சாலை வரி, காப்பீடு, சுங்கச்சாவடி கட்டணத்தில் சற்று விலக்கு அளித்தால் கட்டணத்தை ஓரளவு குறைக்க முடியும்.
பொதுமக்கள் அவசியம் இருந்தால் மட்டுமே பயணிக்க முன்வர வேண்டும். எங்கள் தரப்பில் பஸ்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளித்து தகுந்த பாதுகாப்புடன் இயக்குவோம். பயணிகளும் தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். அடுத்த ஒரு ஆண்டுக்கு ஆம்னி பஸ் தொழில் சற்று பாதிப்படைந்து தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், மற்றொரு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் கூறுகையில், ‘ஊரடங்கால் எங்கள் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு தான் இருக்கிறது. ஆம்னி பஸ்கள் இயக்குவது தொடர்பாக மத்திய-மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகள் வைத்துள்ளோம்.
அது சம்பந்தமாக அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. பஸ்கள் இயக்குவது குறித்து எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் இதுவரை அரசு தரப்பில் இருந்து வரவில்லை. நெறிமுறைகள் வந்த பிறகே கட்டணம் உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். எனவே தற்போது வரை கட்டண உயர்வு எதுவும் இல்லை’ என்றார்.