விவசாயிகளிடம் இருந்து மேலும் 6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் - அமைச்சர் காமராஜ் தகவல்

விவசாயிகளிடம் இருந்து மேலும் 6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும், தமிழ்நாட்டில் உணவு பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

Update: 2020-05-13 21:30 GMT
சென்னை, 

கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவுத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த சிறப்பு கலந்தாய்வு கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது. 

உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் எம்.சுதாதேவி, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனர் அனில் மேஷ்ராம், உணவு பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் பிரதீப் வி.பிலிப், துணை செயலாளர் வளர்மதி மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் நிறைவாக அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:-

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் வழங்க முதல்-அமைச்சரால் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், 98.77 சதவீதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுவிட்டது.

மேலும் அரசு அறிவித்த விலையில்லா பொருட்கள் ஏப்ரல் மாதத்தில் 96.30 சதவீதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும், மே மாதத்தில் இதுவரை 73.37 சதவீதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள் பாதிக்காமல் இருக்கும் பொருட்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 49 நாட்களில் மட்டும் 2 லட்சத்து 87 ஆயிரத்து 4 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதனையும் சேர்த்து, இந்த ஆண்டு இதுவரை 22 லட்சத்து 51 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் ஆண்டில் மேலும் 6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 76 ஆயிரத்து 606 விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக பயனடைந்துள்ளனர். விற்பனை செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்குகளின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்